புத்தகக் காட்சி
Posted Date : 10:06 (19/06/2013)Last updated : 10:06 (19/06/2013)

வாசகர்களை வாசிக்கக் கிடைத்த வாய்ப்பு! 
ஆங்கில வருடத்தின் தொடக்கத்திலேயே தமிழர்களின் பாரம்பரியப் பண்டிகைகள் தொடங்கிவிடுகின்றன. அதில் ஒன்று பொங்கல் பண்டிகை. அதன் நிறைவு நாளான காணும் பொங்கல் அன்று, புத்தகக் காட்சியைக் காணும் அற்புத வாய்ப்பு அடியேனுக்கு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி.

புத்தகக் காட்சியின் வளாகத்துக்குள் நுழைந்தபோது எதிர்பட்ட அனைவரில் அநேகரின் கைகளில் தவழ்ந்தது விகடன் பிரசுர நூல்கள். வித்தியாசத்தையே அத்தியாவசியமாக வைத்து நூல்களை தேர்ந்தெடுத்து பிரசுரிப்பதில் விகடன் குழுமம் பெருமைகொள்கிறது. ‘அடடே... ஆரம்பமே அசத்துதே!’ என்று, என் உள்ளத்தில் ஊற்றெடுத்த உற்சாக மிகுதியால் புத்தக அரங்குகளை நோக்கி என் நடை வேகம் எடுத்தது. வழியில் அமைத்திருந்த பிரமாண்ட மேடையில் கு.ஞானசம்பந்தன் நடுவராக வீற்றிருக்க ‘இலக்கியங்களை நாம் கற்பது, மன மகிழ்ச்சிக்காகவா? மன எழுச்சிக்காகவா?’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றுக்கொண்டு இருந்தது.

மேடையில் ஒலித்த மேலான கருத்துகளை கவனித்தவாறு புத்தக அரங்கினுள் நுழைந்தேன். அந்தக் காட்சியைக் காண கண்கள் இரண்டு போதாது. ஆம், நுழைவாயிலின் ஓர் ஓரத்தில் தன் பெற்றோர் வாங்கித் தந்த ‘விகடன் இயர்புக் & 2013’ என்ற நூலை கைகளில் தவழவிட்டு, தன் வாழ்க்கையை வடிவமைக்க உதவும் கட்டுரைகளை படித்துக்கொண்டு இருந்தனர் மாணவிகள் இருவர். இந்தக் காட்சியை ரசித்தபடியே விகடன் ஸ்டாலை நோக்கிச் சென்றேன். நான் முதல் நாளில் பார்த்த அந்த விறுவிறுப்பையும் தாண்டி, அதீத சுறுசுறுப்புடன் செயல்பட்டுக்கொண்டு இருந்தது புத்தக விற்பனை. விகடன் பிரசுர வெளியிடுகளில் நேற்றைய (16/01/2013) நிலவரம் ‘வட்டியும் முதலும்’, ‘தென்னாட்டுச் செல்வங்கள்’, உ.வே.சா&வின் ‘என் சரித்திரம்’, ‘விகடன் சுஜாதா மலர்’, விகடன் இயர்புக் & 2013’ முறையே ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என, தனக்குரிய இடங்களை தக்கவைத்துக்கொண்டன. மேலும், ஃபேஸ்புக் A to Z வங்கிகள் A to Z, மாலிக்காபூர், மருதநாயகம் என, அறிவியல் தொழில்நுட்பம் தொடங்கி தொல்லியல் வரலாற்று நூல்கள் வரையில் பெருவாரியான நூல்களை அள்ளிச் சென்றனர் வாசகப் பெருமக்கள்.

“சார், விகடன்னாலே தரமான, சிறப்பான, வித்தியாசமான தகவல்கள் அடங்கி இருக்கும்ங்கிறதுல எனக்கு அபார நம்பிக்கை. என் நம்பிக்கைக்குப் பாத்திரமா விகடன் பிரசுரம் இந்த வருஷம் வெளியிட்டுள்ள பல நூல்களை சொல்லலாம். உதாரணமா, மதராசபட்டினம் tஷீ சென்னை, விகடன் சுஜாதா மலர், விகடன் இயர்புக். முக்கியமா, கோட்டோவியங்களோட புனிதத்தை புத்தம்புதியதாக சொல்லியிருக்கும் ‘தென்னாட்டுச் செல்வங்கள்’. அப்பப்பா... அந்தப் படங்களை எல்லாம் பார்க்கும்போது, சில்பிக்கு நிகரா இன்னும் யாரும் பிறக்கலை, பிறக்கவும் முடியாதுன்னுதான் தோணுது. சார், ஆனந்த விகடனில் வெளிவந்த ‘பொன்னியின் செல்வன், தென்னாட்டுச் செல்வங்கள்‘ எல்லாம் நூல் வடிவம் ஆனா மாதிரி, ‘சித்ர ராமாயண’த்தையும் நூலா வெளியிட்டா என்னை மாதிரி வாசகர்களுக்கு இதெல்லாம் மிகப்பெரிய வரப்பிரசாதமா இருக்கும். இந்த மாதிரி பழங்காலத்து ஏடுகளை தொகுத்து நவநாகரிக முறையில் பளிச்சுன்னு பதிவு செய்ய விகடன் மாதிரியான பாரம்பரியமிக்க நிறுவனங்களாலதான் முடியும்” என்று தன் உள்ளத்தில் சிலிர்த்தெழுந்த உணர்வுகளுக்கு வார்த்தை வடிவம் கொடுத்தார் முருகன் என்கிற வாசகர்.

எழுத்தாளர் சுஜாதாவின் ரசிகர்களில் ஒருவரான முகுந்தன் என்பவர், “சார், இந்த வருடத்தினுடைய ஹைலைட்டே ‘விகடன் சுஜாதா மலர்தான்’ சார். அந்த நூல்ல சுஜாதா வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் என்னென்ன பிடிக்கும், எதை எதை ஆர்வத்தோட அவரிடம் இருந்து எதிர்பார்ப்பார்கள், அவருடைய பிரபலமான சிறுகதைகள், கட்டுரைகள் என, அந்த மலருக்கு மணம் சேர்த்த விகட பிரசுரத்துக்கு என் சார்பா வாழ்த்துகளை தெரிவிச்சுக்கிறேன்” என்று வாழ்த்தி எனக்கு விடை கொடுத்தார். இதுபோன்ற வாசகர்களின் வேண்டுகோளும் வாழ்த்துகளும்தான் ஒவ்வொரு பிரசுரத்தையும் உற்சாகத்துடன் உழைக்க வைக்கின்றன என்பதை நான் அங்கே உணர்ந்தேன்; புத்தகத்தோடு புத்தகமாக வாசகர்களை வாசிப்பதைத் தொடர்ந்தேன். 
- பாசுமணி

Comments