+2-க்குப் பிறகு...

+2-க்குப் பிறகு...

படிப்பில் இருவிதமான கட்டங்கள். +2 வரையிலான படிப்புக்கும், அதன் பிறகான கல்லூரிப் படிப்புக்கும் நிறைய வித்தியாசங்கள். +2வில் மிகச் சிறப்பான மதிப்பெண் பெறுகிற ஒரு மாணவன் கல்லூரியில் சராசரி மதிப்பெண் வாங்கக்கூட தடுமாறும் நிலை. காரணம், தனக்குத் தகுந்த படிப்பு எது என்பதை அந்த மாணவன் அறியாததுதான். எதில் சாதிக்க முடியும் என்பதை மாணவர்கள் உணரத் தவறுவதும், பெற்றோர்கள் தங்களின் விருப்பத்தை மாணவர்களின் மீது திணிப்பதுமே இத்தகைய திண்டாட்டத்துக்கு வழிவகுக்கின்றன. இன்றைய நவீன உலகில் மருத்துவம், பொறியியல், நிர்வாகவியல், புள்ளியியல், விண்வெளியியல், பொருளாதாரம், சட்டம், விவசாயம், அழகியல்... என எத்தனையோ விதமான படிப்புகள் உள்ளன. நம் விருப்பத்துக்கு ஏற்ப, நம் கனவுக்குத் தகுந்த படிப்பைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு - நேற்றைய தலைமுறைக்கு வாய்க்காத வரம் இன்றைய மாணவர்களின் மடியில் சம்மணமிட்டு அமர்ந்து இருக்கிறது. +2 முடித்த பிறகு நமக்கான சிறந்த படிப்பைத் தேர்ந்தெடுக்கத் தேவையானது நிதானமான யோசனை. நமக்கான கோர்ஸ் எது, அதனை சிறப்பாக வழங்கும் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் எவை என்பதை எல்லாம் ஆராய்ந்து மேற்படிப்பைத் தொடர்வதே சிறந்தது. அதற்காகவே பிரத்யேக முயற்சியுடன் பா.சந்திரமோகன் எழுதி இருக்கும் ஆக்கபூர்வ வழிகாட்டி இந்த நூல். பொறியியல், மருத்துவம் தொடங்கி சகலவிதமான படிப்புகள் குறித்தும், அதற்கேற்ற கல்லூரிகள் குறித்தும் நூலாசிரியர் விரிவாக எழுதி இருப்பது ஒவ்வொரு மாணவனையும் விரல் பிடித்து அழைத்துச் செல்லும் சேவைக்கு நிகரானது. மாணவர்கள் மட்டும் அல்லாது பெற்றோர்களும் படித்து, தக்க துணையாகக் கைகொள்ள வேண்டிய புத்தகம் இது. கிராமப்புற மாணவர்களை மனதில்கொண்டு, அவர்களுக்கு எளிதில் விளங்கும் வண்ணம், எத்தகையப் படிப்புகளுக்கு எதிர்காலம் உண்டு என்பதையும் விவரிக்கிறது இந்தப் புத்தகம். படிப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் அனைவரும் படிக்கவேண்டிய பயனுள்ள துணைவன் இந்தப் புத்தகம்!

Thank you for your interest. What do you think of our new design?.
 
Name
Email
Phone
Comments
Feedback